வியாழன், 2 டிசம்பர், 2010

விடுதலைப் போரின் வீர மரபு - 1



“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”- ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை, ஜனவரி, 1782.
முகலாய சாம்ராச்சியம் நொறுங்கி, அதன் கவர்னர்களாக ஆங்காங்கே நியமிக்கப்பட்ட நிஜாம், ஆற்காட்டு நவாப் போன்றவர்கள் தம்மை மன்னர்களாகப் பிரகடனம் செய்து கொள்ள, அவர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்களும் சிற்றரசர்களும் அவர்களது அதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுக்க, முடிவில்லாத போர்களால் விவசாயமும் உள்நாட்டுத் தொழில்களும் சின்னாபின்னமாக்கப்பட்டுவந்த காலம்தான் ஹைதர் காலம்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியான இந்தக் காலகட்டத்தில் இந்துஸ்தானத்தின் பல்வேறு இடங்களில் தம் வணிக மையங்களை உருவாக்கியிருந்தனர் ஐரோப்பியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர். இந்துஸ்தானத்தின் பிரபுக்குலம் தமக்குள் கட்டி உருண்டு கொண்டிருந்ததால், ஐரோப்பாவிலிருந்து கொண்டுவந்த ஆடம்பரப் பொருட்களை இங்கே சந்தைப்படுத்தவும் முடியாமல், மலிவான தரமான இந்தியத் துணிகளின் ஆக்கிரமிப்பால் தடுமாறிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் தொழில்வளர்ச்சியைக் காப்பாற்றவும் முடியாமல் ஆங்கிலேய ஆளும் வர்க்கங்கள் தவித்து வந்த காலமும் அதுதான்.
‘இந்துஸ்தானத்’தின் பொருட் சந்தையைக் காட்டிலும் போர்ச்சந்தை பெரிதாக இருப்பதால், வணிகம் செய்து பொருளீட்டுவதைக் காட்டிலும், அந்த வணிகத்தைப் பாதுகாப்பதற்காகத் தாம் கொண்டுவந்த படையை வாடகைக்கு விட்டுப் பொருளீட்ட முடியும் என்பதை கும்பினிக்காரர்கள் புரிந்து கொண்டார்கள். போரிடும் சமஸ்தானங்களின் சார்பில் கூலிப்படையாய்ச் சென்றார்கள். வரி கட்டாத பாளையக்காரர்களை மிரட்டி வரி வசூலிக்கும் அடியாள் படை வேலையும் செய்தார்கள். பாளையக்காரர்களிடம் வரி தண்டும் உரிமையையும் வணிகம் செய்யும் உரிமையையும் பெற்றார்கள்.கட்டுப்படாத பாளையங்கள் மீது படை நடத்திப் போர் புரிந்து வரி வசூலிக்கும் ‘சிரமம்’ கூட இல்லாமல், உட்கார்ந்த இடத்திலிருந்து கூலிப் படையை வைத்தே இராச்சியம் ஆள முடியுமென்ற இந்த அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாத நவாப்பு, பூலித்தேவனுக்கெதிராகக் கும்பினிப் படையை ஏவிவிட்ட காலமும் அதுதான்.
ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்”. அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.
எனவே ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலப்பிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஹைதரின் கொள்ளுப்பாட்டன் ஒரு தர்காவின் பணியாள். தாழ்தப்பட்ட முசுலிம்களின் சூஃபி வழிபாட்டு முறையையே ஹைதரின் குடும்பம் பின்பற்றியது என்பதிலிருந்து அவரது சமூகப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள இயலும். ஆற்காடு திப்பு மஸ்தான் தர்ஹாவில் நேர்ந்து கொண்டு அவர் நினைவாகத் தன் மகனுக்குத் திப்பு என்று பெயர் சூட்டினார் ஹைதர்.
குதிரைப்படை வீரனாக மைசூர் உடையார் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது மூன்றாவது கர்நாடகப் போர்களில், உடையாரின் குதிரைப்படைத் தளபதியாக பிரெஞ்சுக்காரர்களுடன் இணைந்து போரிட்ட ஹைதர், திண்டுக்கல்லின் பவுஜ்தாராக (கவர்னர்) உடையாரால் நியமிக்கப்பட்டார்.
மன்னன் இறந்த பின் அரண்மனைச் சொகுசை அனுபவிப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத மன்னனின் வாரிசுகளை ‘கவுரவமான அரியணையில்’ ஓரமாக அமர்த்திவிட்டு மைசூர் அரசை விரிவுபடுத்தத் தொடங்கினார் ஹைதர்.
1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.
படைகளுக்கும் வரிவசூலுக்கும் பாளையக்காரர்களின் தயவைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு மையப்படுத்தப்பட்ட இராணுவத்தையும் அரசையும் உருவாக்குவதை நோக்கித் திரும்பியது ஹைதரின் கவனம். மைசூர் அரசின் கீழிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாளையக்காரர்களை நீக்கிவிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யும் மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரத்தை உருவாக்கினார் ஹைதர்.
சிப்பாய்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் என்னும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ஹைதர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஹைதருடைய படைவீரர்களின் எண்ணிக்கையோ 1,80,000. துப்பாக்கிகள் பீரங்கிகள் ஆகியவற்றை உருவாக்கவும் இயக்கவும் 210 ஐரோப்பியர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார் ஹைதர்.
1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அதனைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி:
“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.” ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?
முதல் போரில் தோல்வி கண்டபின் நிஜாமுக்கு எதிராகக் கூட்டணி அமைக்க ஆங்கிலேயர்கள் ஹைதரை அழைத்தபோது அவர் அதற்கு இணங்கவில்லை. அதேபோல, பிளாசிப் போரில் ஆங்கிலேயர் வென்றுவிட்ட செய்தியறிந்த கணம் முதல் மராத்தியர்களையும் ஹைதர் எதிரியாகக் கருதவில்லை.
1780இல் தொடங்கி 1784இல் முடிந்த இரண்டாவது காலனியாதிக்க எதிர்ப்புப் போர்தான் ஹைதரின் கனவுப்போர். தன்னந்தனியே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்திக் கொண்டே, மராத்தாக்களையும் நிஜாமையும் இணைத்து ஒரு ஐக்கிய முன்னணி அமைத்து ஆங்கிலேயரைத் துடைத்தொழிக்க முயன்றார் ஹைதர். ஆனால், முதுகெலும்பில் தோன்றிய புற்றுநோய் அவரை 60வது வயதில் காவு கொண்டுவிட்டது.
மரணத்திற்குச் சில மணி நேரங்கள் முன், 1782 டிசம்பர் சித்தூர்ப் போர்க்களத்தில் இருந்தபடியே, மலபாரில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த தன் மகன் திப்புவுக்கு ஹைதர் எழுதிய கடைசி கடிதம் நெஞ்சை உருக்கும் ஓர் ஆவணம்.
அந்தக் கடிதத்தில் மைசூர் அரசின் பாதுகாப்பைப் பற்றி ஹைதர் கவலைப்படவில்லை. ஆசியாவில் கவுரவமான இடத்தைப் பெற்றிருந்த ‘இந்துஸ்தானம்’ சிதறிச் சின்னாபின்னமாகி விட்டதே என்று கலங்குகிறார். ‘இந்துஸ்தானத்’தின் மக்களுக்கு நாட்டின் மீதான நேசம் போய்விட்டதே என்று வருந்துகிறார். கவுரவத்தை இழந்து அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களின் துரோகமும், சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பும் காலனியாதிக்க எதிர்ப்புணர்வாக ஹைதரிடம் கருக்கொள்வதை நாம் காண்கிறோம்.
ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டி முனையாக மைசூர் விளங்கவேண்டும் என்பதுதான் திப்புவுக்கு ஹைதர் விட்டுச் சென்ற உயில்.
நன்றி -வினவு

விடுதலைப் போரின் வீர மரபு

அறிமுகம் ....

காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த கட்டுரைகள் மீட்டு கொண்டு வரும்.
ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும்.

1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.
சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.
பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.
இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.
நன்றி- வினவு

சனி, 16 அக்டோபர், 2010

ராபர்ட் கால்டுவெல்

ராபர்ட் கால்டுவெல்




கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.

பொருளடக்கம்

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

மொழியியல் ஆய்வுகள்

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.

வரலாற்று ஆய்வுகள்

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக "தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள்

  • நற்கருணை தியான மாலை (1853)
  • தாமரைத் தடாகம் (1871)
  • ஞான ஸ்நானம் (கட்டுரை)
  • நற்கருணை (கட்டுரை)

கால்டுவெல் இயற்றிய ஆங்கில நூல்கள்

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856)
  • திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு (A Political and General History of Tinnevely, 1881)


காரல் மார்க்ஸ் வாழ்க்கை

Karl Marxபிறப்பு: 05-05-1818.


தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி - 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.

சொந்த நாடு: பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.

கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.

காதல் வாழ்க்கை:

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக...

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.

காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!

மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:

ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில்ஆய்வு மாணவர்கள்என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

ஜென்னியின் காதல்:

என் மகன் உனக்கு உகந்தவன் அல்லமற்றும்நீ அவனை மறந்து விடுபோன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்துமடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள்இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி... ஜென்னி என்றால் காதல்....”

தொழில்:

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.

திருமண வாழ்க்கை:

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1. உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

2. உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான்முன்னேற்றம்”. இதன் காரணமாகமுன்னேற்றம்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்குஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை... மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. 27வயதே ஆன இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள்: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவுஉலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான்பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாகலண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புகழ்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்ஸீம் ஏங்கல்ஸீம் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்ஸீம் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின்தேக விற்பனை பெண்கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

எல்லா நாடும் என் நாடே!

எல்லா மக்களும் என் மக்கள்!!

நானோர் உலக மகன்!!!”

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி... ஓரே ஒரு அடி... “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கஸீக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்தபெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான்உலகத்தின் பொருளாதாரம்பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகிமூலதனம்எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலேமூலதனம்உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகமூலதனம்கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும்நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனதுமூலதனம்எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.

யூதனாகப் பிறந்தார்!

கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!

மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்................”.